ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ,154.84 கோடி மதிப்பீட்டில் 5 தளங்கள், 500 படுக்கை வசதிகள் 10 அறுவை சிகிச்சை அரங்கங்கள் அடங்கிய புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் திறந்துவைத்து மருத்துவ சேவைகளை துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மதுரையில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் இதுவரை உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த 9 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு முழு கவனம் செலுத்தப்பட்டு உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும், முதல்வரின் உத்தரவின் பெயரில் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் தேசிய தர நிர்ணய உறுதிச் சான்றிதழ் 2013 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 239 சான்றிதழ்களை தமிழக அரசு வாங்கிய நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சுகாதாரத் துறையில் ஒரே ஆண்டில் 239 சான்றிதழ்கள் கிடைத்துள்ளது. தலைக்காயம் சிகிச்சை மையம் விரைவில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேகாலயா மாநிலத்திற்கு அந்த அரசு கேட்டுக் கொண்டதன் பெயரில் தமிழக முதல்வரின் உத்தரவின் கீழ் தமிழ்நாட்டு மருத்துவர்கள் 29 பேர், 6 மாதங்கள் அங்குள்ள மருத்துவர்கள் 29 பேருக்கு பயிற்சியளித்தனர். பயிற்சி முடிந்து அழைத்துச் செல்லும்போது மேகலாய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் இனிமேல் எங்கள் மாநிலத்தில் கர்ப்பிணி தாய்மார்களின் இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு அதிகப்படியான அளவில் குறைந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவில் முதல் முறையாக ஒரு மாநிலத்து மருத்துவர்களுக்கு இன்னொரு மாநில மருத்துவர்கள் பயிற்சி அளிப்பது என்பது இதுவே முதல் முறை என்ற சாதனையையும் நம்முடைய மருத்துவப் பெருமக்கள் இன்றைக்கு அளித்திருக்கிறார்கள். இப்படி ஏராளமான விஷயங்கள் தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம்முடைய முதல்வரின் ஆட்சியில் மருத்துவத் துறையில் சாதனை படைத்து வருகிறோம்.
ஒன்றிய அரசால் கடந்த 2017 முதல் வழங்கப்படும் தட்ஷயா சான்றிதழ், தமிழகத்திற்கு கடந்த ஏழு ஆண்டுகளில் 77 மட்டுமே கிடைத்தது. அதில் நம்முடைய தமிழக முதல்வரின் ஆட்சியில் கடந்த ஒரே ஆண்டில் 43 சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே 50% அளவில் சான்றிதழ்களை பெற்றது தமிழகம் மட்டுமே என்பதை பெருமையாக தெரிவித்துக் கொள்கிறோம்.
மொரிசியஸ் சுகாதாரத்துறை அமைச்சர் கடந்த வாரம் தமிழகத்திற்கு வந்திருந்தார். அவர் கூறும்போது, “மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அவர்கள் நாட்டிற்கு கொள்முதல் செய்ய உலக வங்கியிடம் கேட்ட போது, இந்தியாவில் தமிழகம் என்ற மாநிலம் உள்ளது. அந்த மாநிலம்தான் மருந்துகளும் மருத்துவ உபகரணங்களையும் கொள்முதல் செய்வதில் நம்பர் ஒன்றாக திகழ்கிறது. ஆகவே, அவர்களைப்போய் ஆலோசனை கேளுங்கள் என உலக வங்கியே தமிழகத்தை சுட்டிக்காட்டி உள்ளதாக தமிழகம் வந்த மொரிசிய சுகாதாரத் துறை அமைச்சர் கூறினார்”. இதனை தமிழக முதல்வர் பரிசீலனை செய்து ஐந்து சதவீதம் மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் அவர்களின் நாட்டிற்கு வழங்க முடிவு செய்துள்ளது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.