நேற்று கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்ட நிலையில் தற்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக சென்னை தீவுத்திடல் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலானது இன்று காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை சென்னை தீவுத்திடல் மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விடிய விடிய ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என்று அவரை காண்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் குணச்சித்திர நடிகர் எம்.எஸ். பாஸ்கர் கண்ணீர் மல்க விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நேற்று முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்ற பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், விஜய் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் நேரில் வந்து கண்ணீர் மல்க தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
மறைந்த விஜயகாந்த்தின் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யபடுகிறது.
அதற்குள் அவரை கண்டுவிட வேண்டுமென வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் தீவுத்திடலில் குவிந்து வருகின்றனர். இதனால் போக்குவரத்தில் பல மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. சுமார் 1500 போலீசார்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கழிவறை, குடிநீர் வசதிகளும் செய்யப்படுள்ளன.