காவிரி விவகாரத்தில் மாபெரும் போராட்டக் களம் அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்று திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த 6 வாரங்களுக்குள் புதிய திட்டத்தை வகுக்கும்படி கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவிட்டது. அதற்கான கெடு முடிந்தும் மத்திய அரசு வாரியத்தை அமைக்கவில்லை. இந்த வழக்கில் இதற்கு முன் நடந்த விசாரணையின்போது, 2 வாரங்களுக்கு நதிநீர் பங்கீடு குறித்த வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடையும் நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போடு வரைவுத்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கேட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி நீர் திறந்து விட நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது 4டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்தால் நீர் தர முடியுமா? முடியாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதிமன்ற உத்தரவை மீறினால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்து, வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ’காவிரி வாரியம் அமைக்காமல் மத்திய அரசின் பச்சைத்துரோகம் தொடர்ந்தால் மாபெரும் போராட்டக்களம் அமைக்கப்படும். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டும் வரை அந்தப் போராட்டம் தொடரும். அனைத்துப் பிரச்னைக்கும் மக்கள் சக்தியை திரட்டி போராட்டுவதுதான், தீர்வு காண வரலாறு காட்டிய வழி. உச்சநீதிமன்றம் வார்த்தைகளில் கண்டிப்பு காட்டிவிட்டு அவகாசத்தை நீடிப்பது நீதியை மழுங்கடிக்கும் செயலாகும். மே 8-ல் உச்சநீதிமன்றம் தமிழக நலனை கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று கூறியுள்ளார்.