கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து தர பணம் பெற்ற வழக்கில் புழல் சிறையின் முதன்மை தலைமை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
புழல் சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு சொகுசு வசதிகள் செய்து தர பணம் பெற்றதாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் புழல் சிறையின் தலைமை காவலர் பிச்சையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான ஜெயிலர் ஜெயராமனை லஞ்ச புகாரின் அடிப்படையில் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், இது தொடர்பாக சிறைத்துறை டிஐஜி முருகேசன் விசாரணை நடத்தி வந்தார்.
இதில், மேலும் இருவர் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து, இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி பரிந்துரை செய்தார். இதையடுத்து புழல் சிறையின் முதன்மை தலைமை காவலர் சேகரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதே போல, அப்போது புழல் சிறையில் பணியாற்றிய முதன்மை தலைமை காவலர் வேலுச்சாமி, தற்போது பாளையங்கோட்டை சிறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரையும் பணியிடை நீக்கம் செய்து பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.