போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் குறைந்தளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து இன்று காலை வழக்கம்போல் புறப்பட வேண்டிய பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டிருக்கின்றன. வேலைநிறுத்தம் காரணமாக பணிமனை முன்பு காவல்துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்லவன் இல்ல பணிமனையில் இன்று அதிகாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல், ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டு பேருந்துகளை இயக்க வேண்டும் என, அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார். 90 சதவிகித அண்ணா தொழிற்சங்கத்தினரை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் பணிமனையில் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டிருக்கின்றன. திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பிற ஊர்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.