“வாடிவாசலில் திருமணம்” ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இணைந்த காதல் ஜோடியின் விருப்பம்

“வாடிவாசலில் திருமணம்” ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இணைந்த காதல் ஜோடியின் விருப்பம்
“வாடிவாசலில் திருமணம்” ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இணைந்த காதல் ஜோடியின் விருப்பம்
Published on

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியன்று வாடிவாசல் முன்பு தமிழ் மரபுபடி திருமணம் செய்துகொள்ள அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஒரு காதல்ஜோடி மனு அளித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த எழுத்தாளரான கார்த்திகேயன் மற்றும் சமூகஆர்வலரான வித்யாதரணி என்ற இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சந்தித்துகொண்டனர். போராட்டகளத்தில் உரிமைக்காக போராடியபோது இருவருக்குமான எண்ணங்கள் ஒரே மாதிரியாக அமைந்ததால் இருவரிடையே நட்பு உருவாகி காதலாக மாறியிருக்கிறது. இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் தங்களது வாழ்வில் ஆடம்பரத்தை துறந்து தற்சார்பு வாழ்க்கையை பின்பற்றி வாழ்ந்துவருகின்றனர்.

இருவரும் தங்களது வாழ்வில் எளிமையை கடைபிடிக்கும் வகையில் கதர் ஆடைகளை மட்டுமே அணிந்துவருவதோடு, 4 ஜோடி கதர் ஆடைகள் மட்டுமே வைத்துள்ளனர்.

தங்க ஆபரணங்களை அணியாமல் எளிய ஐம்பொன்களாலான அணிகலன்களை மட்டுமே அணிந்துகொண்டுள்ளனர். திருமணம் என்றாலே ஆடம்பரம்தான் என்பதை தகர்க்கவேண்டும் என்ற நோக்கத்தோடு எளிமையான முறையில் திருமணம் செய்யவுள்ளதாக கூறுகின்றனர் இந்த காதல் ஜோடி.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘’திருமணம் என்பது அன்பை பகிரும் நிகழ்வாக இருக்க வேண்டுமே தவிர பொருளாதார நெருக்கடியாக மாறிவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு எளியமுறையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தை நடத்தவுள்ளோம். திருமண விழாவில் இயற்கையை பாதுகாக்கும் வகையில் பனை ஓலையால் ஆன மாலை உள்ளிட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்தவுள்ளோம்.

ஐம்பொன் மோதிரத்தால் மோதிரம் மாற்றி திருமண உறுதியேற்பு நிகழ்ச்சியை நடத்த எண்ணியுள்ளோம். உணவுகளிலும் பழங்கள் மற்றும் வேகவைக்காமல் உண்ணும் காய்கறிகளையே விருந்தாக வழங்க உள்ளோம். ஆடம்பர திருமணங்களால் ஏற்படும் கருத்து வேறுபாடு, தற்கொலை போன்ற முரணான செயல்களை தவிர்க்க இதுபோன்ற எளிமை திருமணத்தை செய்யவுள்ளோம்’’ என்றனர்.

எனவே வாடிவாசலில் உதித்த காதல்அங்கேயே திருமணமாக மாறவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் காதல்ஜோடி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்கவுள்ளதால் கல்யாண கனவு நிறைவேறுமா? என ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர் காதல் ஜோடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com