ஓமலூர் அருகே ஒரு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். காதலனை விட 10 வயது குறைவான பெண்ணை ஏமாற்றியதாகக் கூறி பெண்ணின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி தாலுக்காவில் கணவாய்புதூர் ஊராட்சி உள்ளது. இங்குள்ள ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், பட்டப்படிப்பு முடித்துவிட்டு திருப்பூர் தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதேபோன்று ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தென்றல். இவர் தருமபுரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு இளநிலை அறிவியல் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், இருவரும் காதலிக்க துவங்கினர்.
பிரபாகரன் திருப்பூரில் இருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் தென்றலை சந்தித்து பேசி வந்ததாகவும், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களின் காதல் தென்றலின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இந்தநிலையில், தென்றலை விட பிரபாகரனுக்கு 10 வயது அதிகம் என்பது தெரிந்ததால், இவர்களது காதலுக்கு தென்றலின் பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், தருமபுரி பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பிரபாகரனின் நண்பர்கள் வீட்டில் தங்கி இருந்தனர்.
தென்றலின் பெற்றோர் தேடுவதை அறிந்த காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து சமரசம் செய்தார். அப்போது தனது மகளை விட பத்து வயது பெரியவனுக்கு தென்றலை கொடுக்க முடியாது என்று, பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இருவரும் திருமண வயதை எட்டியதால், தென்றலை அவரது காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர்.