நெல்லையில் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளைஞரை சமாதானம் பேச அழைத்த பெண் வீட்டார் இளைஞரின் தலையை துண்டித்து கொலை செய்ததாக கூறப்படும் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்துள்ள மறுகால் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த நம்பிராஜன், அதே தெருவில் வசிக்கும் 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி, இருவரும் குறுக்குத்துறை முருகன் கோயிலில் திருமணம் செய்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பு காரணமாக நெல்லை டவுனில் உள்ள உறவினர் வீட்டில் காதல் தம்பதியர் தங்கியிருந்தனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பெண்ணிற்கு 17 வயதே ஆவதால் பெண்ணின் சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நண்பர்கள் அழைப்பதாக வெளியே சென்ற நம்பிராஜன், குறுக்குத்துறை ரயில்வே கேட் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு மற்றும் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லை டவுன் காவல் நிலைய போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பெண்ணின் சகோதரர்கள் உட்பட மேலும் சிலர் சேர்ந்து சமாதானம் பேசி முடிப்பதாக நம்ப வைத்து நம்பிராஜனை இரவில் வெளியே அழைத்து வந்தது கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து தலைமறைவாக இருக்கும் பெண்ணின் சகோதரர்களை காவல்துறையின் தேடி வருகின்றனர்.