தங்களை ஆவணக்கொலை செய்யப்போவதாகவும், ஆகவே பாதுகாப்பிற்கு துப்பாக்கி உரிமம் வேண்டுமென்று காதல் தம்பதியினர் தஞ்சை காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரவீன்குமார் (30). இவரது மனைவி சரண்யா (27) கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் தனது மனைவியுடன் பிரவீன்குமார் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், “நானும், எனது மனைவியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆட்டோ டிரைவரான என்னை நாச்சியார்கோவில் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஒருவர், ரவுடிகள் பட்டியலில் சேர்த்து வழக்குப்பதிவு செய்தார். அதன்பிறகு அவரும், மற்ற சில போலீசாரும் அடிக்கடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வந்தனர். மேலும் எனது மனைவிக்கும் போலீசார் கொலை மிரட்டல் விடுத்தனர். அதுமட்டுமல்லாமல் தேவனாஞ்சேரியை சேர்ந்த சிலர், என்னைப் பற்றியும், எனது மனைவியை பற்றியும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் பயந்து போன நாங்கள் காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையே எங்களை கூலிப்படையை வைத்து கொலை செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக அறிந்தோம். தமிழகத்தில் தருமபுரி இளவரசன், உடுமலை சங்கர் உள்ளிட்டோர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல் எங்களையும் கொலை செய்ய முயற்சிப்பதாக தெரிகிறது. எனவே, எங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டு கொள்கிறோம். மேலும் பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வழங்கவும் கேட்டு கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.