நெல்லையில் காதல் திருமணத்துக்கு ரூ.1,500 அபராதம் வசூலிக்கும் விநோத கிராமத்தில், நாட்டாமை மகளின் காதல் திருமண விவகாரத்தில் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ளது கௌதமபுரி கிராமம். இந்த ஊரில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கௌதமபுரி கிராமத்தில் கடந்த 27ஆம் தேதி ஊர் கமிட்டிக்கும், ஊர் கட்டுப்பாடுகளை மீறியதாக ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட தகராறில் மதி என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த மதி என்பவர் அந்த கிராமத்தில் நாட்டாமையாக இருப்பவரின் தம்பி. இவர் எவ்வாறு இறந்தார் என்பதற்கு முன்பு, கெளதமபுரி கிராம் தொடர்பாக பார்ப்போம்.
சினிமாவில் வருவதுபோல கௌதமபுரி ஊருக்கு என்று சில கட்டுப்பாடுகள் காலங்காலமாக இருந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்திலும் திருமணம் நடக்கும்போது, அவர்கள் ஊர் கமிட்டிக்கு ரூ.200 ரூபாய் செலுத்த வேண்டுமாம். அதுவே யாரேனும் காதல் திருமணம் செய்துகொண்டால், அந்தக் குடும்பத்தினர் ஊர் கமிட்டிக்கு ரூ.1500 அபராதமாக கொடுக்க வேண்டுமாம். இதுமட்டுமின்றி கௌதமபுரி ஊருக்குள் பெண்களுக்கு எதிராக எந்த குற்றங்கள் நடந்தாலும், அதற்கு தண்டனையாக அபராதம் விதிக்கப்படும் நடைமுறை இருந்துள்ளது. அத்துடன் எந்த ஒரு குற்றச் செயலுக்கும் தண்டனை என்பது ஊர் கமிட்டி முடிவு தான் முடிவு செய்யுமாம். இவ்வாறு பெறப்படும் அபாராதத் தொகை ஊரின் பொது நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுமாம்.
எந்தக் குற்றத்திற்கும் அபராதத் தொகை கட்டிவிட்டு, ஊருக்குப் பொதுவான கோயிலில் மன்னிப்பு கேட்பது வழக்கமாக இருந்துள்ளது. ஒட்டுமொத்த 500 குடும்பங்கள் ஏற்றுக்கொண்ட இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள், நாட்டாமை திரைப்படத்தில் வருவது போலவே ஊரில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவார்களாம். இந்த நடைமுறை இன்று வரை அங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதாக ஊர்மக்கள் கூறுகின்றனர். இந்த ஊருக்கு நாட்டாமையாக இருந்து ஊர் வழக்கங்களை ரவி என்பவர் முன்னின்று நடத்தி வந்துள்ளார்.
இப்படி இருக்கையில், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நாட்டாமையாக இருந்த ரவியின் மகள் காதல் திருமணம் செய்து ஊரை விட்டு வெளியேறியுள்ளார். காதல் திருமணம் செய்ததால் நாட்டாமை ரவியை ரூ.1500 அபராதம் கட்டுமாறு ஊர் மக்கள் கேட்டுள்ளனர். ஆனால் தனது மகள் இறந்துவிட்டதாக கூறிய ரவி, தன்னால் அபராதத்தை கட்ட முடியாது என்று கூறியுள்ளார். அப்படியென்றால் மகளை எப்போது வீட்டில் சேர்த்துக்கொள்கிறீர்களோ அப்போது அபராதம் கட்ட வேண்டும் என ஊர்மக்கள் கூற, தான் எப்போதும் சேர்த்துக்கொள்ளப்போவதில்லை, அப்படி சேர்த்துக்கொண்டால் ஒரு லட்சம் அபராதம் கட்டுவதாக நாட்டாமை ரவி ஆவேசத்துடன் வசனம் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பேரக்குழந்தையுடன் வந்த மகளை ரவி வீட்டில் சேர்த்துக்கொண்டுள்ளார். இதைக்கண்ட ஊர்மக்கள் நாட்டாமை ரவியை அபராதம் செலுத்துமாறு கூற, அவர் முடியாது என மறுத்துவிட்டு கடந்த 27ஆம் தேதி போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.
இந்த சூழலில்தான் கடந்த 27ஆம் தேதி திங்கட்கிழமை ஊருக்குள் தன் தம்பியுடன் வந்த ரவி மீது தாக்குதல் நடந்துள்ளது.இந்த தாக்குதலில் ரவியின் தம்பி மதி அதிக காயம்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளார். ரவி சிறிய காயத்துடன் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி இருக்கிறார். மதியின் உயிரிழப்பு தொடர்பாக அம்பாசமுத்திரம் காவல்துறையில் வழக்கு பதிவு செய்து இந்த வழக்கு தொடர்பாக தற்போதைய கமிட்டி தலைவர் உட்பட மொத்தமாக 11 பேரை கைது செய்துள்ளனர்.
ரவி நாட்டாமையாக இருந்தபோது ஊருக்குள் கட்டுப்பாடுகளை கடுமையாக கடைப்பிடித்தவர். ஆனால் தனது குடும்பம் என்று வரும்போது அந்தக் கட்டுப்பாடுகளை மீறியதால், இந்த மோதல் ஏற்பட்டதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். நாகரீகம், அறிவியல், வளர்ச்சி, தொழில்நுட்பம் என நாடு முன்னேறிக்கொண்டு சென்றாலும், சினிமாவில் வருவதைப்போல இன்னும் பல கிராமங்கள் பின்தங்கியே தான் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.