சாதி மறுப்பு திருமணங்களும், காதல் திருமணங்களும் சமூகத்தின் இயல்பான விஷயங்களாகிவிட்ட நிலையில், இன்னும் இவற்றையெல்லாம் குற்றமாக கருதும் போக்கும் இருக்கவே செய்கிறது. கோவை மாவட்டம் அன்னூர் அருகே சாதி மறுப்பு திருமணம் மற்றும் காதல் திருமணம் செய்த 9 குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆர்டிஓ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பழனிச்சாமி, 25 ஆண்டுகளுக்கு முன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர். இந்த ஒரே காரணத்திற்காக அன்று முதல் இன்றுவரை இவர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இவரது தாயின் இறுதிச்சடங்குக்குக் கூட அனுமதிக்காத அவலத்தை சந்தித்தவர் பழனிச்சாமி. இவரைப்போல, சாதிமறுப்பு, மதம் மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் அத்தனை பேரும் ஊரைவிட்டு ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரான பழனிசாமி இதுதொடர்பாக கூறுகையில், “சாதி விட்டு சாதி திருமணம் செய்ததால், என் அம்மா இறந்ததற்கு கூட அனுமதிக்கவில்லை. என் உடன் பிறந்தவர்கள், ஊர்க்காரர்கள் என்ன சொல்கிறார்களோ அதை கேட்டுக் கொண்டோம். ஒதுங்கிவிட்டோம்” என தெரிவித்தார்.
இவரைப்போல மேலும் 8 குடும்பங்கள் அன்னூர் அருகே வடக்கலூர் கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளன. இந்த கிராமத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 260 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதே ஊரில் வசிக்கக்கூடிய சுந்தரம் மற்றும் 8 குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். காதல் திருமணம் மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்த ஒன்பது குடும்பங்களுக்கு ஊர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உறவினர் வீட்டு விழாக்கள், கோயில் திருவிழாக்களிலும் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
பாதிக்கப்பட்டவரான சுந்தரம் இதுதொடர்பாக பேசுகையில், “என்னுடைய பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஒரே சமுதாயம்தான். ஆனால் இந்த ஊர் முறைப்படி, நான் ஒவ்வொருத்தரையும் வீடு வீடாக சென்று அழைத்து ஊர் பஞ்சாயத்துமுன் அபராதம் கட்டியபின்தான் ஊருடன் சேர்த்துக் கொள்வேன் என சொன்னார்கள். 8 வருடமாக என் வீட்டிற்கு வரவிடாமல் தடுத்து வைத்துள்ளார்கள். என் பெண் என் வீட்டிற்கு வந்தால் உறவினர்களையும் ஒதுக்கிவைத்து விடுவோம் என மிரட்டுகிறார்கள்.
கோவில்கள், ஊரில் நடக்கும் நல்லது கெட்டது என எதிலும் கலந்துகொள்ள விடமாட்டார்கள். பிள்ளைகளை பெற்றோரையே பார்க்க விடாமல் ஒரு நடைமுறை இந்த ஊரில் இருக்கிறது. இதை சட்டப்படி தவறு என சுட்டிக்காட்டி, காவல்நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்த நபர்களை எல்லாம் என்னுடன் சேர்ந்து அவர்களையும் ஒதுக்கி வைத்துள்ளார்கள். சமீபத்தில் என் நண்பர் இறந்ததற்கு சென்ற போதுகூட, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் இறந்தவர்களின் உறவினர்களிடம் பேசி என்னை வெளியில் அனுப்பிவிட்டார்கள். மிகுந்த அவமானமாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சுந்தரம் அளித்த புகாரின்பேரில் வருவாய்த்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை இல்லை என்பதால் சுந்தரம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் ஆர்டிஓ விசாரணை நடத்தி நான்கு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 ஆண்டுகளாக ஆர்டிஓ விசாரணை நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த விசாரணை எப்போது நிறைவடையும்? எப்போது இந்த சமூக அவலம் நீங்கும் என்று தெரியவில்லை.. சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பாரதியார் பாடிய நிலையில், குலம் பார்த்து, சாதி பார்த்து, ஊரை விட்டு ஒதுக்கிவைக்கும் வழக்கம் இன்னும் தொடர்வது வேதனைதான்.