செய்தியாளர்: எல்.எம்.மனோஜ் கண்ணா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றியம் பருத்திப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் கதிர்வேல் (55). இவர் நேற்றிரவு கத்திக் குத்து காயத்துடன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த எலச்சிபாளையம் போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பருத்திப்பள்ளி ஊராட்சி தலைவர் கதிர்வேல் கூறியதாவது, “எனது ஊராட்சி பகுதியைச் சேர்ந்த சோமனம்பட்டி கிராமத்தை சேர்ந்த எனது உறவினரான மணி என்பவரின் மகன் செல்வராஜ் (33). தனது அண்ணன் முறை உள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகள் கௌதமியை (26), கடந்த 2 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த அவர்களிடம் பெற்றோர்களை வைத்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், இருவரும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால் அவர்கள் விருப்பப்படி வாழ காவல் துறையினர் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மகள் உறவுமுறை உள்ள பெண்ணை செல்வராஜ் திருமணம் செய்து கொண்டதால் சமுதாய மக்களிடையே குழப்பமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனது தலைமையில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இருவரும் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்ததால் கௌதமியின் தாயார் வசந்தா, ரூ.7 லட்சம் செலவு செய்து கௌதமியை நர்ஸ் வேலைக்கு படிக்க வைத்ததால் தற்போது கடனாளியாக இருப்பதாகவும் அந்த கடன் தொகையை கட்டிவிட்டு நீ விருப்பப்பட்டவருடன் வாழ்ந்து கொள் என கூறினார்.
இதன் அடிப்படையில் செல்வராஜ் தனக்கு சொந்தமான வீட்டை எழுதிக் கொடுத்து விடுவதாக கூறிய நிலையில், அடுத்த நாள் கிரைய செட்டில்மெண்ட் செய்து தருவதாகக் கூறினார். ஆனால் கூறியபடி செல்வராஜ் மற்றும் அவரது உறவினர்கள் அடுத்த நாள் பஞ்சாயத்துக்கு வராத நிலையில், தொடர்ந்து காலையில் அழைத்தபோது மாலை பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளலாம் என பஞ்சாயத்துக்கு வந்தவர்களில் சிலர் கூறினார்கள். இதனால் ஓய்வெடுக்க வீட்டுக்கு வந்தபோது, நேற்றிரவு சுமார் 10 மணிக்கு வீட்டில் படுத்திருந்த போது திடீரென ஒருவர் வேகமாக வந்து இனி பஞ்சாயத்து தலைவராகவும் இருக்க முடியாது உயிரோடும் இருக்க முடியாது என கூறிக் கொண்டே கத்தியால் என்னை குத்தினர்.
அப்போது நான் சத்தமிட்டதை அடுத்து, என்னுடைய மனைவி, மகள் ஆகியோர் ஓடி வந்தனர். அதனைக் கண்ட கத்தியால் குத்திய நபர் தனது இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிவிட்டார். இதையடுத்து கத்தியால் குத்திய நபர் குடியரசு. இவரும் மூர்த்தி மற்றும் சரண் ஆகியோர் தான் செல்வராஜ் திருமணத்தை நடத்தி வைத்ததோடு அவருக்கு ஆதரவாக நேற்று பேச வந்தவர்கள்” என கூறியுள்ளார்.
செல்வராஜின் தூண்டுதலின் பேரில் தான் இவர்கள் மூவரும் தன்னை கத்தியால் குத்த வந்தனர் எனவும் நல்வாய்ப்பாக தான் உயிர் பிழைத்ததாகவும் இந்த சம்பவம் தொடர்பாக எலச்சிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மூர்த்தி மற்றும் சரண் ஆகியோரை கைது செய்துள்ளதாகவும், குடியரசை தீவிரமாக தேடி வருவதாகவும் கதிர்வேல் கூறினார். இச்சம்பவம் பருத்திப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.