நாகையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வடமழை கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகள் சுமித்ரா. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் பரமேஸ்வரனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். சுமித்ரா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர்களுடைய காதல் சுமத்ரா வீட்டிற்கு தெரியவர பரமேஸ்வரன் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் வீட்டில் திருமணத்திற்கு மறுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 22 ஆம் தேதி சுமித்ரா வீட்டை விட்டு வெளியேறி பரமேஸ்வரனை காதல் திருமணம் செய்து கொண்டார். இது சுமத்ரா வீட்டிற்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மாற்றுச் சாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதை அறிந்து, சுமத்ரா மற்றும் பரமேஸ்வரனை ஆணவக் கொலை செய்யப் போவதாக மிரட்டி வருவதாகவும், இருவரும் செல்லும் இடங்களில் பின் தொடர்ந்து விரட்டி வருவதாகவும், இதனால் தனக்கும் தனது கணவருக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி சுமத்ரா மற்றும் பரமேஸ்வரன் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து இருவரையும் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.