சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த நூற்பாலை பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் ஒரிசா மாநிலம் இந்பூரைச் சேர்ந்த அஜய்குமார் மண்டல் தனது மனைவி வந்தனா மாஜியுடன் வசித்து வருகிறார். இருவரும் ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், வீட்டில் இருக்கும்போது கணவன் மனைவி இருவரும் அவ்வப்போது ஆன் லைனில் ரம்மி விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. ரம்மி விளையாட்டில் அடிக்கடி பணத்தை இழந்து வந்ததால் அதை கைவிடும்படி தனது மனைவி வந்தனா மாஜியிடம் அஜய்குமார் மண்டல் கூறியுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் வந்தனா மாஜி தொடர்ந்து ரம்மி விளையாடியதால் ரூ.70 ஆயிரத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறால் மனைமுடைந்த வந்தனா மாஜி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு வந்த கரிவலம் வந்த நல்லூர் போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.