திருத்தணி அருகே தனியார் கம்பெனி வேன் மீது எதிரே வந்த மினிலாரி மோதியதில் 23 பேர் படு காயம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கீழாந்தூர் மற்றும் பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றவர்கள் வேலை முடிந்து விட்டு வீட்டிற்கு வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை கார்த்திக் என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஆற்காடுகுப்பம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது ஆந்திராவிலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் ஏற்றிக் கொண்டு வந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பலமாக மோதியது. இதில் கீதாஞ்சலி, துர்கா, தேவி, அன்பு, சின்னராசு, அஜித்குமார் உள்பட 23 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காயம் அடைந்தவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மினி லாரி டிரைவர் கார்த்திக்கை, தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.