தலைமறைவாக உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க விமானநிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கந்துவட்டி கொடுமையால் நடிகர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் கடந்த 21ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் சடலத்தை கைப்பற்றிய பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், கந்துவட்டிக் கொடுமையால் அடைந்த பாதிப்பு குறித்து அவர் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது மிகப்பெரிய தவறு என குறிப்பிட்டுள்ளார். 7 ஆண்டுகளாக வட்டிக்கு மேல் வட்டி கட்டிய பிறகும், அன்புச்செழியன், தம்மையும் தமது குடும்பத்தினரையும் சமீபகாலமாக கீழ்த்தரமாக அவமானப்படுத்தியதாக கடிதத்தில் எழுதியிருந்தார். இதனால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும் அசோக்குமார் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனிப்படை அமைத்து காவல்துறையினர் அன்புச்செழியனை தேடி வருகின்றனர். அன்புச்செழியனின் சொந்த ஊர், பெங்களூரில் உள்ள நண்பர் இல்லம் போன்ற இடங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஹைதராபாத்தில் அன்புச்செழியன் உள்ளார் என்ற தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனனர்.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள அன்புச்செழியனுக்கு எதிராக காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு அன்புச்செழியன் தப்பிச்செல்லாமல் இருக்க விமானநிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.