ஊழல் ஒழிப்பின் முதல்படியாக இருக்கும் லோக் ஆயுக்தா சட்டமுன் வடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்காக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டிலுள்ள 17 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற எடுத்த நடவடிக்கை குறித்து ஜூலை 10ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில் மே 29ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் லோக் ஆயுக்தா சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார். ஆய்வுக்குப்பின் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படும். லோக் ஆயுக்தா ஊழல் ஒழிப்பின் முதல்படியாக இருக்கும் என்றும், லோக் ஆயுக்தாவால் ஊழலை ஒழிக்க முடியாது என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.