சசிகலாவின் தயவு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு தேவைப்படாது என மதுரையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா பேட்டியளித்தார்.
மதுரை ஆலங்குளம் பகுதியில் அதிமுக கிழக்கு கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜன்செல்லப்பா....
"உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மூன்று சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 46 சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு தொண்டர்கள் தீவிர களப்பணியாற்றி உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெரும்.
கூட்டணி குறித்து தலைமை கழகம் முடிவே இறுதியானது. தலைமையின் முடிவை முழுமனதாக ஏற்று தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றி வெற்றி காண்போம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த மிகப்பெரிய கட்டமைப்புடன் அதிமுக உள்ளது. இந்த நிலையில் சசிகலாவின் தயவு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு தேவைப்படாது. அவர்கள் துணை வந்தால் தான் அதிமுக மீண்டெழும் என்ற நிலை இல்லை" என்று பேசினார்.