2-ஆம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காலை 9 மணிவரை 9.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 2-ஆம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 35 ஊராட்சி ஒன்றியங்களில், 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஒன்றிய உறுப்பினர்கள், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 ஊராட்சி உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தென்காசி மாவட்டம் சிவசைலம் ஊராட்சியில் 45 பேர், வார்டு மாறி வாக்களித்துவிட்டதால், ஒரு ஊராட்சி வார்டுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற 34,65,724 வாக்காளர்களுக்காக ஆறாயிரத்து 652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 9 மணிவரை 9.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல் 2 மணிநேரத்தில் அதிகளவாக விழுப்புரம் மாவட்டத்தில் 13.88%, குறைந்தளவாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 5.22% வாக்குகள் பதிவாகியுள்ளது.