சென்னையில் தண்ணீர் லாரி மோதியதில் எல்.கே.ஜி. குழந்தை நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அன்பு நகரைச் சேர்ந்தவர் சுல்தானா. இவர் எல்.கே.ஜி. பயிலும் தனது மகன் முகமதுவை பள்ளியில் இருந்து வீட்டு அழைத்துச் சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதிவேகத்தில் வந்த தண்ணீர் லாரி அவர்கள் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட அதிலிருந்த குழந்தை முகமது லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டான்.
லாரி சக்கரம் தலையில் ஏறியதால் நிகழ்விடத்திலேயே குழந்தை முகமது உயிரிழந்தான். இதைக்கண்ட சுல்தானா கதறி துடித்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார். அவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அடித்து உதைத்தனர். மேலும் ஆத்திரத்தில் லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் ஓட்டுநரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.