வெள்ளநீரில் கரைந்த மண் பொம்மைகள் ஒருபுறம்... முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கிய பீங்கான் பொம்மைகளை சேகரிக்கும் பணி மறுபுறம். சாலையில் குளம்போல தேங்கிய மழைநீரில் இந்தப் பெண்மணி தேடிக் கொண்டிருப்பது பொம்மைகளை மட்டுமல்ல, அவரது வாழ்வாதாரத்தையும்தான்.
ஆவடியை சேர்ந்த பொம்மை வியாபாரியான வள்ளியின் வாழ்வில் இப்படி அழியாத வடுவை ஏற்படுத்திச் சென்றுள்ளது, மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம். கணவரை இழந்த நிலையில், பிள்ளைகளை படிக்க வைப்பதற்கும், வாழ்க்கை நகர்த்துவதற்கும் ஆதாரமாக இருந்த பொம்மை வியாபாரம் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சிதைந்து போயுள்ளது.
கடன் வாங்கி விற்பனைக்கு வைத்திருந்த 80,000 மதிப்பிலான மண் பொம்மைகள், பீங்கான் பொம்மைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக வேதனையோடு கூறுகிறார் பொம்மை வியாபாரி வள்ளி.
அரசு உதவிக்கரம் நீட்டினால் மட்டுமே வாழ்வாதாரம் மீளும் என்ற வள்ளி போன்று சாலையோரம் கடை வைத்திருந்த பலரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.