வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியை குற்றவாளி என தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது.
இதில் காணொளி அல்லது நேரில் ஆஜராகலாம் என பொன்முடிக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்றத்திற்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி காலை 9.30 மணியளவில் புறப்பட்டனர். நேரில் இருவரும் ஆஜராக உள்ளனர்.
பொன்முடி மீதான வழக்கு விவரங்களை முழுமையாக அறிய...கீழே இணைக்கப்பட்டுள்ள கட்டுரையை படிக்கவும்...
அமைச்சர் பொன்முடி வருவாய்க்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக பதியப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தார்.
அதன் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், நீதிமன்றத்திற்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி தற்போது வந்தடைந்தனர். நீதிபதி ஜெயச்சந்திரன் தண்டனை விவரங்களை வாசிக்க உள்ளார்.
நீதிபதி ஜெயச்சந்திரன்தான் இந்த வழக்கை தொடர்ந்தார். அதன்பின் பொன்முடி வழக்கை விசாரித்த நீதிபதிகள்:
நீதிபதி பாஸ்கரன்
நீதிபதி மதிவாணன்
நீதிபதி சதீஷ்குமார்
நீதிபதி இளந்திரையன்
நீதிபதி சிவஞானம்
இத்தனை நீதிபதிகள் விசாரித்த பின் மீண்டும் நீதிபதி ஜெயச்சந்தின் கைக்கே வழக்கின் விசாரணை மீண்டும் சென்ற நிலையில், அவரே பொன்முடியை விடுவிக்கும் சிறப்பு நீதிமன்ற ஆணையை ரத்து செய்து தீர்ப்பளித்தார். தற்போது அவரே தண்டனை விவரத்தையும் விசாரிக்கிறார்.
சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததை ரத்து செய்கிறோம்.
லஞ்ச ஒழிப்புத் துறை கொடுத்த அனைத்து ஆவணங்களையும் ஏற்றுக்கொள்கிறோம்.
65% அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சொன்ன வாதம் என்னவெனில், “பொன்முடி மனைவியின் வருமானத்தை பொன்முடியின் வருமானமாக சேர்த்து கணக்கெடுத்துள்ளனர். அதனால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்ற வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் ஓராண்டில் இருந்து ஏழாண்டு வரை அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என மூத்த பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்ததாக கணக்கிடப்பட்டிருக்கும் தொகை குறைவாக இருப்பதால் ஓராண்டு வரை அவருக்கு தண்டனை வழங்க வாய்ப்பு அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.
அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தண்டனை விவரம் அறிவிப்பு...
பொன்முடி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “வயதையும் மருத்துவக் காரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யும் நோக்கில் இது செய்யப்பட்டுள்ளது. இந்த தண்டனை நிறுத்திவைப்பு, 6 மாதங்களா அல்லது ஒரு மாதம்தானா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. எப்படியாகினும் தண்டனை வழங்கப்பட்டுவிட்டது; அது நிறுத்தியும் வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அமைச்சரின் பதிவி குறித்து கேள்வி எழுந்துள்ளது.
தீர்ப்பு 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டு, மேல்முறையீட்டுக்கு ஏதுவாக காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் உச்ச நீதிமன்றத்தினை நாடி பொன்முடி மேல் முறையீடு செய்து கொள்ள வேண்டும். ஜாமீனும் பெற வேண்டும். இல்லையெனில் சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அதேநேரம் பதவியை அவர் நிச்சயம் இழக்கிறார் என்றே சொல்லப்படுகிறது. அமைச்சர் பதவி மட்டுமன்றி, திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் பொன்முடி இழந்ததாக சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்முடி தரப்பில் அதை நிறுத்திவைக்க 60 நாட்கள் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தாண்டியும் அவகாசம் தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் நீதிமன்றத்தினை அணுகலாம் என்று நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தீர்ப்பை பாஜக வரவேற்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நம்மிடையே அவர் பேசுகையில், “தாமதமான தீர்ப்பு என்றாலும், நல்ல தீர்ப்பு வந்துள்ளது. நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
பொன்முடி அவரது மனைவின் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு தொடுத்த நிலையில் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை இன்று விதிக்கப்பட்டது. தலா 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது அவரது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகள் பறிக்கப்படுமென தெரிகிறது.
இந்நிலையில் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பார்ப்போம்...
அடுத்தபடியாக, ‘உயர்நீதிமன்றத்தின் தண்டனை விவரங்கள் சட்டப்பேரவை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவுகளின்படி தகுதி இழப்பு அறிவிப்பாணையை பேரவை செயலகம் வெளியிடும். சட்டப்பேரவை செயலகத்தின் அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு தகுதி இழப்பு நடைபெறும். இதனை தொடர்ந்து தகுதியிழப்புக்கு பின் திருக்கோவிலூர் தொகுதி காலி என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும். காலி என அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்திற்குள் திருக்கோவிலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும்’
என தெரிகிறது.
அமைச்சர் பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
“வரும் ஜனவரி 22-ம் தேதிக்கும் விழுப்புரம் நீதிமன்றத்தில் பொன்முடியும் அவரது மனைவியும் சரணடையவேண்டும். சரணடையாவிடில் அவர்களை கைது செய்ய கீழமை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம்”- சென்னை உயர்நீதிமன்றம்.