வீடியோக்கடை, போயஸ்கார்டன், சிறைவாசம்... சசிகலாவும், ஜெயலலிதாவும்!

வீடியோக்கடை, போயஸ்கார்டன், சிறைவாசம்... சசிகலாவும், ஜெயலலிதாவும்!
வீடியோக்கடை, போயஸ்கார்டன், சிறைவாசம்... சசிகலாவும், ஜெயலலிதாவும்!
Published on

சசிகலா எந்த அரசு பதவியிலும், அரசியல் பதவியிலும் இருந்ததில்லை என்றபோதும் கடந்த 30 ஆண்டுகளாக தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத பெயர் சசிகலா. ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர் சசிகலாதான்.

1984ம் ஆண்டுகளில் வினோத் வீடியோ விஷன் என்ற வீடியோ கடையை வைத்திருந்து நடத்தி வந்தார் சசிகலா. சசிகலாவின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்தது அந்த வீடியோக்கடைதான் என்று கூறப்படுவதும் உண்டு. காரணம், ஜெயலலிதாவுடன் நட்பு ஏற்படக் காரணமே அந்தக்கடைதான். சசிகலா வீடியோக்கடை நடத்தி வந்த நேரத்தில் அவரது கணவர் நடராஜன் கடலூர் மாவட்ட அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அதன் மூலம் கடலூர் ஆட்சியர் சந்திரலேகாவுக்கு சசிகலா அறிமுகம். அந்த நேரத்தில்தான் அதிமுகவின் கொள்கைபரப்பு செயலாளராக ஜெயலலிதா இருந்தார். அவரது அரசியல் சுற்றுப்பயணங்களை படமெடுக்கும் வாய்ப்பு சசிகலாவின் வீடியோ கடைக்கு கிடைக்க அதன் மூலம் ஜெயலலிதாவுக்கு அறிமுகமானார் சசிகலா.

அதன் பிறகு ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற சசிகலா அவருடனே பயணிக்கத் தொடங்கினார். அன்று தொடங்கிய பயணம் ஜெயலலிதாவின் இறுதி காலம் வரை தொடர்ந்தது. குறிப்பாக எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய ஆதரவு அளித்தது சசிகலாவும் அவரது குடும்பமும். அதன் பிறகு சசிகலா - ஜெயலலிதா என்ற நட்பு மிகவும் நெருக்கமானது. சசிகலாவின் உறவினர் சுதாகரனை தத்துப்பிள்ளையாக ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இந்த நட்பு இருந்தது. அதன்பின்னர் போயஸ் கார்டன், அரசியல் என அனைத்திலும் சசிகலா தவிர்க்க முடியாத ஆளாக ஆனார்.

1991ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற பின்பு சசிகலா தவிர்க்கமுடியாத ஆளாக ஆனார். அதிமுகவின் அரசியல் நகர்வுகள் ஒவ்வொன்றிலும் சசிகலாவும் இருந்தார். அரசியல் முடிவுகள் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டாலும், முடிவுக்கு பின்னால் சசிகலாவின் ஆலோசனையோ பிரதானம் என கூறும் அதிமுகவினரும் உண்டு. அந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையானவராக இருந்தார் சசிகலா. சசிகலாவின் நெருக்கமே ஜெயலலிதாவுக்கு சில பின்னடைவுகளையும் கொடுத்தது. சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள் மீதான பல குற்றச்சாட்டுகள் நேரடியாக ஜெயலலிதாவை பாதித்தன. இடையிடையே சசிகலாவை ஒதுக்கிவைக்கவும் செய்தார் ஜெயலலிதா. ஆனால் அவையெல்லாம் தற்காலிகமாகவே இருந்தது. அதன்பின்னர் பல்வேறு வழக்குகள், சிறைவாசம் என பல துயரிலும் ஜெயலலிதாவை விட்டு விலகாமல் நின்றார் சசிகலா. இது ஜெயலலிதாவின் மரணம் வரை தொடர்ந்தது. ஆனால் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு காட்சிகள் மாறின.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்று, முதல்வராகவும் முயற்சி செய்தார் சசிகலா. அந்த நேரத்தில்தான் ஓ.பன்னீர்செல்வம் தனியாக பிரிந்து சென்று இவருக்கு எதிராக செயல்பட்டார். அச்சமயத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவந்த காரணத்தால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். அதன் பின்னர் சசிகலாவின் சிறைவாசம், ஒபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு,அமமுக உருவாக்கம் என பல்வேறு ட்விஸ்டுகள் அரங்கேறின.

தற்போது 4 ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை ஆகி இன்று தமிழகம் திரும்புகிறார் சசிகலா. சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தப்போகும்? சசிகலாவின் வருகை அதிமுகவில் அதிர்வை உண்டாக்குமா? பதில் வெகு தொலைவில் இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com