எல்.ஜி.பி.டி.க்யூ.ப்ளஸ் (LGBTQ+) எனப்படும் தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள், திருநம்பி போன்ற பால்புதுமையினர் அனைவரும் இணைந்து, ‘வானவில் கூட்டணி’ என்ற பெயரில் அமைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்களுடைய உரிமைகளை வலியுறுத்தி சென்னையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ‘வானவில் சுயமரியாதை’ என்ற தலைப்பில் பேரணி நடத்தி வருகின்றனர். அதில் இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு சுயமரியாதை வானவில் பேரணி, சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் கோலாகலமாக நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று ரவுண்டானா அருகே நிறைவடைந்தது.
இதில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த திருநங்கைகள், திருநம்பிகள், பிற பால்புதுமையினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் வானவில் அமைப்பின் கொடிகளை ஏந்தியவாறு, “நாங்களும் எல்லோரைப் போன்று சாதாரண மனிதர்கள் தான். எங்களுக்கும் சம உரிமை வேண்டும். எங்களது திருமணத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும். குழந்தை தத்தெடுக்க அனுமதி வேண்டும்” என வலியுறுத்தினர். இதில் பிக்பாஸில் கலந்து கொண்ட திருநங்கை நமிதா மாரிமுத்து கலந்து கொண்டார்.
இதுகுறித்து பேரணியில் கலந்து கொண்ட டெல்பினா புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “சென்னை வானவில் கூட்டமைப்பு நிறங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் நான். இன்று நடைபெற்றது வானவில் 15-ஆவது சுயமரியாதை பேரணி.
இந்த பேரணிக்கான முக்கிய நோக்கம் என்பது பாலின பாகுபாடு இருக்கக் கூடாது என்பதுதான். இந்த உலகில் திருநங்கைகள் திருநம்பிகள் எப்படி இருக்கிறார்களோ அதே போன்று தான் தன் பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு இந்த உலகில் உரிய அங்கீகாரம் வேண்டும். அவர்களையும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இன்று இந்த பேரணி நடத்தப்படுகிறது. எங்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் இருக்கிறது. மிக முக்கியமாக உச்சநீதிமன்றத்தில் எங்களது திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது.
எங்களுக்கு திருமணத்தில் அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும், குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதற்கு அரசு அனுமதி வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தான் எங்களது இந்த பயணம் என்பது தொடங்குகிறது. தமிழக அரசு எங்களுக்கு என நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருந்தாலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்டோருக்கு உரிய வாய்ப்பினை வழங்க வேண்டும்” என்றார். இந்த பேரணியை ஒட்டி பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இப்பேரணியின் காணொளியை, இங்கே காணலாம்: