நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபா எழுதிய உருக்கமான கடிதம் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த பெருவளூர் கிராமத்தை சேர்ந்த பிரதீபா, சிறுவயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்தார். பத்தாம் வகுப்பின் போது அரசு பள்ளியில் படித்து, பொதுத் தேர்வில் 495 மதிப்பெண் பெற்றார். அவரது மருத்துவப் படிப்பு கனவை உணர்ந்த பெற்றோர் வறுமையிலும், மேல்நிலைப் பள்ளி படிப்பிற்காக தனியார் பள்ளியில் சேர்த்தனர். மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்த பிரதீபா, 12-ஆம் வகுப்பு தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றார். நீட் தேர்வை இரண்டாவது முறையாக எழுதிய பிரதீபா வெறும் 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரதீபா அதனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி இதேபோல் நீட் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த ஆண்டு மாணவி பிரதீபா உயிரிழந்தது பலரையும் களங்க வைத்துவிட்டது. இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபா தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
அதில், “என் மேல நீங்க வச்சிருந்த நம்பிக்கையை என்னால காப்பாத்த முடியல. என்னால தோல்வியை தாங்குற சக்தி இல்லை. எத்தனை முறை நான் தோல்வியை தாங்குவேன்” என்று இரண்டு பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.