"அதிமுக இரண்டாக உடையாது; திமுகதான் இரண்டாக உடைய போகிறது. ஸ்டாலின் முதலில் அவரது குடும்ப சண்டையை சரி செய்யட்டும்" என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது,
" அதிமுக இரண்டாக உடையும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் திமுகதான் தற்போது இரண்டாக உடைய போகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது. அதிகார சண்டை அவரது குடும்பத்தில் உள்ளது. முதலில் அவரது குடும்பச் சண்டையை சரி செய்து அவர் மீண்டுவர அடுத்த தேர்தல் ஆகிவிடும்.”என்றார்.
மேலும்,“ அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முதல்வர், துணை முதல்வர் வர கோரிக்கை வைத்துள்ளோம். அன்று எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. அவர்களின் ஒப்புதலோடும் வழிகாட்டுதலோடும் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.”எனத் தெரிவித்தார்.
"7.5 சதவீத அரசு மருத்துவ இட ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எங்கும் கோரிக்கை வைக்கவில்லை. இப்படி இருக்கும்போது முதல்வர் அறிவிப்புக்குப் பிறகு அதனை சொந்தம் கொண்டாடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் முயற்சி செய்கிறார். தமிழகத்தில அஇஅதிமுகதான் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் மாற்று கருத்து இல்லை”என்றும் தெரிவித்தார்.