தமிழக முதலமைச்சர் குறித்து பேசியதற்காக நஷ்டஈடு கேட்டு திமுக அனுப்பியதாகக் கூறும் நோட்டீஸ் இன்னும் எனக்கு வரவில்லை அது வந்த பிறகு அதனை எப்படி எதிர்கொள்வேன் என தெரிவிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பாஜக சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பண்டிட் தீனதயாள் உபாத்தியாய உள்ளாட்சி பிரதிநிதிகள் பயிலரங்கம் பெரம்பலூரில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசும்போது... தமிழக முதலமைச்சர் குறித்து தான் பேசியதற்கு திமுக நஷ்டஈடு கேட்டு அனுப்பியதாக கூறப்படும் நோட்டீஸ் தமக்கு வரவில்லை. அது வந்த பிறகு அதனை எப்படி எதிர்கொள்வேன் என தெரிவிப்பேன் எனக்கூறிய அவரிடம்...
நீங்கள் 20 ஆயிரம் புத்தகங்கள் படித்துள்ளதாக கூறியதற்கு திமுகவினர் விமர்சனம் செய்துள்ளனரே எனக் கேட்டதற்கு திமுகவினருக்கு எதையும் படிக்கும் பழக்கம் கிடையாது. இது குறித்து கூட என் மீது அவதூறு வழக்கு போட்டுக் கொள்ளட்டும் கவலை இல்லை என அண்ணாமலை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு 95 சதவீதம் மத்திய அரசு நேரடியாகநிதி வழங்கி வருவதாக குறிப்பிட்ட அண்ணாமலை, மாநில அரசு கடந்த நிதிநிலை அறிக்கையில் கூட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை தடுப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருவதால் அதன் விலை விரைவில் குறையும் என்றும் குறிப்பிட்டார்.