சிறுத்தை நடமாட்டம் உறுதியானதை அடுத்து மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு இரவு ஏழு மணிக்கு மேல் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முருகனின் ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இக்கோவில் அதிகாலை 5 மணி முதல் நடை திறக்கப்பட்டு இரவு எட்டு முப்பது மணி வரை கோவில் இயங்கி வருகிறது.
மலை மற்றும் அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது இருந்து வருகிறது. மருதமலை கோவில் ஒட்டிய மலைவாழ் மக்கள் கிராமம் உள்ளது. இவர்கள் வளர்த்துவரும் நாய்கள் கடந்த சில தினங்களாக காணாமல் போய் உள்ளது. இந்த நிலையில் நேற்று கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
அப்பொழுது அதிகாலை 5 மணி அளவில் சிறுத்தைப்புலி ஒன்று தங்கரதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் வருவது பதிவாகி இருந்தது. இதனால் கோவில் ஊழியர்கள், மலைவாழ்மக்கள் உள்ளிட்டோருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இரவு 7 மணிக்கு மேல் பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது