சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்பதற்கு தேவையான சட்டப் போராட்டத்தை நடத்த முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் சீனிவாச பெருமாள் கோயிலில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார், பின்னர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் கோயிலுக்கு சொந்தமான 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை பார்வையிட்டார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முதற்கட்டமாக 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை முறைப்படி துவங்க உள்ளது என்றார்.
தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு வருமானம் வரும் வகையில் வணிக வளாகங்கள் மற்றும் கல்லூரிகளும் கட்ட அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது எனக் கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு தேவையான சட்டப்போராட்டம் நடத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிவித்தார்.