அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பாமக அளித்த புகாரில் சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பாமக அளித்த புகாரில் சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பாமக அளித்த புகாரில் சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு
Published on

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தமிழக ஆளுநரிடம் பாமக அளித்த ஊழல் புகாரில் சம்பந்தப்பட்ட துறைகளின் விளக்கத்தை பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி தொடர்ந்த வழக்கில், முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களுக்கு எதிராக அப்போதைய ஆளுநர் ரோசையாவிடம் ஊழல் புகார் அளித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றது முதல், அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்திருப்பதாகவும், முதல்வர், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் என பாகுபாடு இல்லாமல் ஊழல் நடவடிக்கை ஈடுபட்டுள்ளதாகவும் ஜி.கே.மணி தெரிவித்திருந்தார். குறிப்பாக, கிரானைட் ஊழல், தாதுமணல் கொள்ளை, ஆற்றுமணல் அள்ளுவது, பாலில் கலப்படம், முட்டை கொள்முதல் என அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், 200 பக்கங்களை கொண்ட பட்டியலை பாமக வழங்கிய நிலையில், தொடர் நினைவூட்டல்களை அனுப்பியதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாமக புகார் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைகளிடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், அவை வந்தவுடன் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பாமக தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com