தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையிலேயே எழுந்த மக்கள் புதுப்பானையில் பொங்கலிட்டு அதனை சூரிய பகவானுக்கு படைத்து மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடி வருகின்றனர். பொங்கலையொட்டி தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், “ தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். இத்திருநாள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கப்பட்டும் ” என தெரிவித்துள்ளார்.
பொங்கலை முன்னிட்டு தமிழக மக்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள் ” என தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் தமிழில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு எனது மகிழ்ச்சியான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். இந்த வருட பொங்கல் திருவிழா அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.” என வாழ்த்து கூறியுள்ளார்.
பொங்கல் திருநாளுக்காக தமிழர்களுக்கு, கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் தமிழில் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ வேகமும், விவேகமும், உழைப்பும், தூய்மையும் சொத்தாய் கொண்ட தமிழ் மக்கள் வாழ்வில் மகிழ்வோடு பொங்கட்டும் புது பொங்கல். என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.