புகழ்பெற்ற எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பாலகுமாரனின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாலகுமாரனின் மறைவு தமிழ் இலக்கிய துறைக்கு பேரிழப்பு எனக் கூறியுள்ளார். பாலகுமாரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில், மனித மனங்களின் ஆழத்தை அளந்து அதனை எழுத்து வடிவாக்கி மக்கள் இதயங்களை வசப்படுத்திய எழுத்துச் சித்தர் பாலகுமாரன் என்று குறிப்பிட்டுள்ளார். பாலகுமாரனின் மறைவு குறித்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாலகுமாரன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சினிமாவில் மட்டுமல்ல இலக்கியத்திலும் பாலகுமாரன் தனது விருப்பத்திற்குரியவர் எனக் கூறினார். எழுத்து ஆளுமை, லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயத்தை தொட்ட படைப்பாளி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாலகுமாரனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். சாகித்ய அகாடமி, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்ற பாலகுமாரனின் மறைவு எழுத்துலகிற்கு பேரிழப்பாகும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.