காவல் நிலைய பாத்ரூம்களில், காவலர்கள் உஷாராக இருக்க, கைதிகள் மட்டும் வழுக்கி விழுவது ஏன் என ஆர்.டி.ஐ. மூலம் வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சமீப காலமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கைதானவர்கள் பாத்ரூம்களில் வழுக்கி விழுந்து கை, கால்களை உடைத்துக் கொள்ளும் சம்பவம் நடந்து வரும் நிலையில், நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் காவல்நிலையங்களில் உள்ள பாத்ரூம்களின் நிலை பற்றி ஆர்.டி.ஐ. மூலம் காவல்துறை இயக்குநருக்கு மனு அளித்துள்ளார்.
அதில், காவல் நிலையங்களில் உள்ள பாத்ரூம்களில் வழுக்கி விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்ட காவலர்கள் கடந்த 2010லிருந்து 2019வரை எத்தனை பேர் என்ற விவரம் மாவட்டவாரியாக தரவேண்டும் என்றும் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகள் அதே ஆண்டுகளில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தரவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
காவல்நிலையங்களில் அமையப்பெற்றுள்ள பாத்ரூம்களில் விசாரணைக் கைதிகள், காவலர்கள் விழாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ள வழக்கறிஞர், காவல்நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்கு எத்தனை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகிறார்கள், அதற்காக ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலவிடப்படுகிறது போன்ற விவரங்களை கேட்டுள்ளார்.
விசாரணைக்கு அழைத்து வந்த கைதிகள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்ட வகைக்கு எத்தனை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது போன்ற கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் வழக்கறிஞர் பிரம்மா எழுப்பியுள்ளார்.