தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 2018 ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் முறைகேடு நடந்ததாக புகார் எழுப்பப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடுத்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இது தொடர்பாக பேட்டியளித்த அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, “திமுக ஆர்.எஸ்.பாரதி புகார் மனு தாக்கல் செய்திருந்தாலும், அதுதொடர்பாக கடந்த ஆட்சியிலே விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை ஒப்படைக்கப்பட்டு இருந்தது. இதில், ஏற்கெனவே உயர் நீதிமன்றம் கொடுத்த சி.பி.ஐ விசாரணை உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. மேலும் இதில், ஆர்.எஸ்.பாரதி வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் கூறி இருந்தார்.
இன்றைய தீர்ப்பில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், தமிழக அரசு நினைப்பதால் விசாரணை நடத்த முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே இன்றைய வழக்கில் ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது” என தெரிவித்தார்.