முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மீதான விசாரணை முடிவில், சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரத்தில் கடந்தாண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமாலத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அவர்.
ஜூன் 14 நள்ளிரவில் கைதான நிலையில், அன்றைய தினம் அதிர்ச்சியில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில், பிணை வேண்டி அவர் அளித்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்துவந்தன. இதனால், சிறையில் ஓராண்டுக்கும் மேலாக இருந்துவரும் செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் பிணை வேண்டி மனு அளித்தார்.
இந்நிலையில்தான், செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார் அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இது குறித்து செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவன் நம்மிடம் தெரிவிக்கையில்,
“செந்தில்பாலாஜி 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணை குற்றவாளியாக இருப்பதால் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிபந்தனைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளவை...
ரூ 25 லட்சத்திற்கு இருநபர் உத்திரவாதம் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
தேவையில்லாத வாய்தாக்கள் வாங்கக்கூடாது.
சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது.
போன்றவைதான். இந்த நிபந்தனைகள் காரணமாக, சட்டத்தின்படி செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை.
சமீபகாலமாக பல்வேறு அமலாக்கத்துறை வழக்குகளில், ‘ஒன்றிய அரசால் தனி மனிதரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகிறது’ என்பதை கருதியும், ‘பிணை வழங்காமல் ஒருவரை நீண்ட நாட்கள் சிறையில் அடைப்பதை கண்டித்தும்’தான் பிணை வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதேபோல மணிஷ் சிசோடியா, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் வழக்குகளிலும் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. ‘ஜாமீனே கொடுக்கக்கூடாது’ என்ற ஒன்றிய அரசின் வாதத்தை அடக்குமுறையாக பார்த்து, தற்போது எல்லா வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் பிணை வழங்கி வருகிறது” என்றார்.