செய்தியாளர் - ஜெ.அன்பரசன்
கடந்த 5 ஆம் தேதி சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 11 நபர்களையும் செம்பியம் போலீசார் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர்.
போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 11 நபர்களையும் பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் பிடித்து வைத்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையை நடத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய எவ்வளவு பணம் வாங்கப்பட்டது? யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர்? என்பது தொடர்பாக 11 பேரிடமும் தனித்தனியாக போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வெளியான சிசிடிவியில் கத்தியோடு ஓடி வந்தவர் கைதான ராமு என்ற வினோத் என்று தெரியவந்துள்ளது.
இந்த ராமு, ரவுடி ஆற்காடு சுரேஷின் மாங்காடு கிளப்பில் ஊழியராக வேலை செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும், ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் மற்றும் ராமு வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல கைது செய்யப்பட்ட 11 பேரின் 6 மாத வங்கி பரிவர்த்தனைகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
போலி நம்பர் பிளேட்களை பயன்படுத்தியும், வேறு நபர்களின் இருசக்கர வாகனத்தில் வந்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருசக்கர வாகன உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஆம்ஸ்ட்ராங்கை 10 நாட்களாக கொலை கும்பல் பெரம்பூர் பகுதியில் நோட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் பெரம்பூர் பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்தியபடியே எவ்வாறு ரூட் எடுப்பது என்பது குறித்து திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
ரத்தம் அதிகளவில் வெளியேறும் நரம்பு பகுதிகளை குறிவைத்து வெட்டவும், மிஸ் ஆகக்கூடாது என திட்டமிட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் திட்டமிட்டு செயல்படுத்த, பாலு தலைமையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் அரங்கேறியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், காவலில் எடுக்கப்பட்ட 11 நபர்களையும் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக்கொன்ற இடமான பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவிற்கு அழைத்து சென்று கொலை செய்தது எப்படி? என நடித்து காட்டி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுந்தனர்.
ஆனால், சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றால் ஏதேனும் பிரச்னை நிகழ வாய்ப்பு இருப்பதால் 11 நபர்களிடமும் தனித்தனியாக வைத்து கொலை நடந்த இடத்தில் இருந்து போலீசார் வீடியோ கால் மூலம் காட்டி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதாவது சம்பவ இடத்தை போலீசார் வீடியோ கால் மூலம் காட்டி 11 பேர் அந்த பகுதிக்கு வந்தது எப்படி? யாரெல்லாம் என்னென்ன செய்தார்கள்? ஆயுதங்களோடு எந்த தெருவில் பதுங்கி இருந்தார்கள்? உள்பட பல்வேறு கோணங்ளில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ், நரேஷ், சீனிவாசன் ஆகிய மேலும் மூன்று பேரை பிடித்து செம்பியம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டுள்ள திமுகவை சேர்ந்த அருள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் செல்போனில் இருந்து கிடைக்கப்பெற்ற எண்களை வைத்து விசாரணை மேற்கொண்டதின் அடிப்படையில் சதீஷ், நரேஷ், சீனிவாசன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.