அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உள்கட்சி மோதலில் ஈடுபட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே. ஜே. கட்சியின் நிறுவனருமான பி. ஏ. ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 5000 கோடி செலவு செய்துள்ளார்; மேலும் ரூ. 1000 கோடி செலவிட உள்ளார் என பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கட்சியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையேயான உரசல், சாதி ரீதியிலான பிரச்சனையாக உருவெடுத்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28ஆம் தேதி மனு அனுப்பியும் அதற்கு எந்த பதிலும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.