“வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை” - லதா ரஜினிகாந்த் விளக்கம்

“வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை” - லதா ரஜினிகாந்த் விளக்கம்
“வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை” - லதா ரஜினிகாந்த் விளக்கம்
Published on

ஆஸ்ரம் பள்ளிக்கு வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை என லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், “ஆஷ்ரம் பள்ளி வளாகத்துக்கான வாடகை முறையாக செலுத்தப்பட்டு வருகிறது. வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை. கொரோனா காரணமாக ஏப்ரல் 2020 காலக்கெடுவுக்குள் வேறு இடத்துக்கு பள்ளியை மாற்ற முடியவில்லை. எங்கள் மனுவை ஏற்று ஏப்ரல் 2021 வரை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது” என்றார்.

முன்னதாக, ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாரான லதா ரஜினிகாந்த் சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடத்திற்கு வாடகை தொடர்பாக பிரச்னை இருந்துவந்தது. இதனிடையே 2013-ஆம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கி ஒரு கோடியே 99 லட்சத்தை செலுத்த உத்தரவிடக்கோரி இட உரிமையாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி திடீரென்று பள்ளியின் கேட்டை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதையடுத்து 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி இரு தரப்பிற்கும் உடன்பாடு ஏற்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தை காலி செய்வது என ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது. இதைத்தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக தாங்கள் உறுதியளித்தப்படி காலி செய்ய முடியாததால், மேலும் ஒரு வருடம் அவகாசத்தை நீட்டிக்கக்கோரி சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்த விசாரணையில் வாடகையை முறையாக செலுத்தி வருவதாகவும் எனவே கால அவகாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி சதீஷ்குமார், கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டடத்தை காலிசெய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்திற்கு 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com