சென்னை தியாகராய நகர், வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், கல்லூரி மாணவர்கள் அதிகளவில் தங்கியுள்ள தனியார் விடுதிகள், வீடுகளில்,அடிக்கடி லேப்டாப்புகள் திருடு போவதாக புகார்கள் எழுந்தன.
வளசரவாக்கம் சிதம்பரம் நகர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கும் சாப்ட்வேர் என்ஜினியர் அப்சல் என்பவரது லேப்டாப் இரவுநேரத்தில் திடீரென காணாமல் போக, வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், லேப்டாப் காணாமல் போன பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைஆய்வுசெய்தபோது, லேப்டாப் திருடர்களின் உருவம் தெளிவாக தெரிந்தது. இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச்சேர்ந்த 24 வயதான முத்துக்குமார், அவரது சகோதரர் சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லேப்டாப்களை பறிமுதல் செய்தனர்.
கைதான இருவரும் அளித்த வாக்குமூலத்தில், கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் தனியார் விடுதிகளை பகலில் நோட்டமிடுவோம் என கூறியுள்ளனர். தற்போதுவெயிலின் கொடுமை தாங்க முடியாமல் சிலர் காற்றுக்காக கதவை திறந்து வைத்துக் கொண்டு தூங்குவார்கள், அப்போது நைசாக நுழைந்து லேப்டாப்புக்களை திருடி சென்று,குறைந்த விலைக்கு விற்றுவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் திருடும் போது பொதுமக்களின் கையில் வசமாக சிக்கிக் கொள்வோம். அப்போது வாய்பேசஇயலாததுபோல் நடித்து, மக்களுக்கு இரக்கம் வரும் வகையில் நடித்து, தப்பிவிடுவதாகக் கூறியுள்ளனர். காவல்துறையினரின் விசாரணைக்கு பின் இருவரும் பூந்தமல்லிநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.