இந்துக்களை காக்க வேண்டும் என்ற அதே வேட்கை, இந்தியர்கள் காக்கப்பட வேண்டும் என்பதிலும் இருக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற மதநல்லிணக்க மாநில மாநாட்டில் பேசிய வைரமுத்து, “பெரிய குளத்தில் எனக்கு இரு தாய்மார்கள். அதே வேளையில் இஸ்லாமியர்கள் எல்லாரும் எனக்கு தாய்மாமன்கள் தான். அனைவரும் ஒன்றாக விவசாயம் பார்த்து வாழ்ந்த நிலையில், அதில் இன்று பிளவு ஏற்பட்டுள்ளது. ஆன்மீகம் என்பது ஒன்று சேர்க்க பார்க்கிறது. அரசியல் எங்களை பிரிக்க நினைக்கிறது. வாய்பாஜ்யிடம் மதநல்லிணக்கத்தை பார்த்தேன். அதே நல்லிணக்கம் அதை பின் தொடரும் தலைவர்களிடமும் இருக்க வேண்டும்.
இந்துக்கள் காக்க வேண்டும் என்பது எவ்வளவு வேட்கையாக உள்ளதோ, அதேபோல் இந்தியர்கள் காக்கப்பட வேண்டும். உடல் மீது உடல் திணிக்கப்படுவதும், மதம் மீது மதம் திணிக்கப்படுவதும், மொழி மீது மொழி திணிக்கப்படுவதும் தான் இந்த உலகின் மிகப்பெரிய வன்முறை. நிலாவில் இந்தியா இறங்கி இருக்கிறது. இந்த வேளையில் இந்தியனை பாதாளத்தில் இறக்கி விட வேண்டாம்” என்று தெரிவித்தார்.