தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
ஏற்காட்டில் நாள்தோறும் இரவு நேரங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே மண் சரிவு ஏற்பட்டது. சாலை மற்றும் தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கீழ் சாலையில் விழுந்த காரணத்தால் வாகன போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து மண்சரிவு குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே மண்சரிவு ஏற்பட்ட பகுதியை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு மேற்கொண்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேலும் சரிவு ஏற்படலாம் என்பதால் அடிவாரத்தில் உள்ள காவல்துறை சோதனை சாவடியிலேயே வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன.