செய்தியாளர்: நிக்ஸன்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே விரகாலூர் கிராமத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு தின்னக்குளம், ஆலம்பாக்கம், புதூர் பாளையம், விரகாலூர் விலாகம், குலமாணிக்கம் இலந்தகூடம், கோவில் எசனை உள்ளிட்ட பல பகுதியிலிருந்து மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் பள்ளி கிராமப்புறத்தில் அமைந்துள்ளதால் பேருந்து வசதி மிக குறைவாகவே உள்ளது. இந்த பகுதிக்கு இரண்டு தனியார் பேருந்துகளும், ஒரு அரசு பேருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆதலால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் ஆபத்தான முறையில் பேருந்தின் படிக்கட்டுகளிலும் பேருந்தின் பின்புற ஏணியிலும் பேருந்து மேற்கூரையிலும் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.