காஞ்சிபுரத்தின் தபால் நிலையங்களில் பல லட்சக்கணக்கான தபால்கள் தேங்கியுள்ளன.
சம்பள உயர்வு வழங்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடர தபால் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். அத்துடன் கிராமப்புற ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய ஆணையம் பரிந்துரையின்படி சம்பளம் வழங்க கோரி இந்த வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. ஊழியர்களின் போராட்டம் காரணமாக பல்வேறு கிராமிய மற்றும் தலைமை தபால் நிலையங்களில் பல லட்சக்கணக்கான தபால்கள் தேங்கியுள்ளன. மேலும் மணியார்டர், துரித அஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன
இதற்கிடையே காஞ்சிபுரத்தில் கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வலியுறுத்தி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தபால் ஊழியர் சங்கத்தின் மாநில உதவித் தலைவர் சி.கே.சுப்பிரமணி தலைமை தாங்கியுள்ளார். இதில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் பங்கேற்றுள்ளனர். கடந்த மே 22-ம் தேதி முதல் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதே தபால்களின் தேக்கத்திற்கு காரணம்.