வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மழை பெய்து வருகிறது.
செங்கல்பட்டில் 117 மில்லி மீட்டர் மழையும், மாமல்லபுரம் பகுதியில் 220 மில்லி மீட்டர் மழையும், தாம்பரம் பகுதியில் 172 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தீவிரமாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைபுதுச்சேரி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காரணை புதுச்சேரி சுசி அவென்யூ பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை ஏரியில் இருந்து வெளியேறும் நீர் சூழ்ந்துள்ளதால் முட்டி அளவிற்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் ஏரியிலிருந்து உபநிநீர் அதிக அளவு வெளியேற்றப்பட்டு வருவதாலும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.