தஞ்சை: 5 ஆண்டுகளாக பெண்ணில் வயிற்றில் இருந்த அலுமினியம் மூடி.. கர்ப்பப்பை சிகிச்சையில் குளறுபடியா?

தஞ்சையில் அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் வயிற்றில் அலுமினியம் மூடி இருந்ததாக தனியார் மருத்துவமனை மீது காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்புதியதலைமுறை
Published on

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள  ஈச்சங்குடி  பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (32). இவர் தஞ்சை நகரக் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "எனது தந்தை சிவானந்தம்  இறந்து விட்டார். தாயார் வசந்தா (52), காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந்தேதி என் தாயாருக்குக் கர்ப்பப்பை வலிகாரணமாக  தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். அதன் பின்னர் எனது தாயாருக்கு அடிக்கடி வயிற்றுவலி மற்றும் ரத்தப்போக்கு  ஏற்பட்டு வந்தது. இதற்காக வலி மாத்திரைகளைச் சாப்பிட்டு  வந்தார். ஆனாலும் வலி சரி ஆகவில்லை என்பதால் மீண்டும் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது எனது தாயாரின் வயிற்றைப் பரிசோதனை செய்த மருத்துவர் வயிற்றில் ஏதோ வட்டமாக இருப்பதாகக் கூறினார்.

இந்த நிலையில் எங்களிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் எனது தாயாருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது வயிற்றில் 3 செ.மீ. அளவுள்ள வட்டமான அலுமினிய மூடி இருந்ததை அகற்றினர். அந்த மூடி மருத்துவ உபகரணங்களுடன் உள்ள பொருளாகும். எனது  தாயாருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பப்பை அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக  வயிற்றில் வைத்து விட்டு சிகிச்சை அளித்து உள்ளனர். தற்போது எதுவும் தெரியாதது போல் எங்களிடம் உங்கள் தாயாரை அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறினார்கள்.  

நான் எனது தாயார் வயிற்றில் என்ன இருந்தது என மருத்துவரிடம் கேட்டதற்கு வட்டமான அலுமினிய மூடி இருந்ததாகக் கூறி அதைக் கொடுத்தார். அதைப்பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். எனவே எனது தாயாருக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து தஞ்சை தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவர் சசிராஜ் செய்தியாளர்களிடம், "நாங்கள் அதிக அளவில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்து வருகிறோம். இரண்டு நாட்கள் மூன்று நாட்களில் சிகிச்சை முடிந்து சென்று விடுவார்கள் எந்தவித தொந்தரவும் இருக்காது. இந்த பெண்மணிக்கு நாங்கள் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்தோம் எந்த விதவித பிரச்சனையும் கிடையாது. அறுவை சிகிச்சை பின்னர் எந்த விதவித மெஷின் வைப்பது கிடையாது. இந்த பெண்மணி சராசரியாக வாழ்ந்து வந்தனர். சிகிச்சை முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. தற்போது வலி ஏற்படுவதாகத் தெரிவித்தனர். தற்போது பரிசோதனை செய்தபோது பொருள் ஒன்று தென்படுவதாகத் தெரிவித்தனர். உடனடியாக நாங்கள் அதை அகற்றி விட்டோம். அந்தப் பெண்மணி நன்றாக உள்ளார்.

மூடி வந்ததற்கான காரணம் அந்த பெண்மணி தான் சொல்ல வேண்டும். அறுவை சிகிச்சைக்கும் இந்த பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது எந்தவித அறுவை சிகிச்சை உபகரணங்கள் கிடையாது. காவல்துறையினர் விசாரணை நடத்தினால் தெரியும். நாங்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com