ஆம்பூர் அருகே பணியின்போது தூய்மைப் பணியாளர் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே பணியாளர் உயிரிழந்தார். லாரி ஓட்டுநரை கைதுசெய்த உமராபாத் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே துத்திப்பட்டு பகுதியில் ஊராட்சிமன்ற தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தவர் கமலா. இன்று கமலா மற்றும் அவருடன் 3 பேர் ஊராட்சி முழுவதும் உள்ள குப்பைகளை சேகரித்து குப்பை வண்டியில் ஏற்றி பாங்கிஷாப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பெரியவரிகம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் இருந்து தோல் கழிவுகளை ஏற்றிகொண்டு அவ்வழியாக ஆம்பூர் நோக்கி சென்ற லாரி, திடீரென அம்பேத்கர் நகர் சாலையில் சென்ற குப்பை வண்டிமீது மோதியது.
இதில் நிலைதடுமாறி வண்டியிலிருந்து கீழேவிழுந்த கமலா மீது பின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே கமலா உயிரிழந்தார். உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து உமராபாத் காவல்துறையின்ர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் மாணிக்கத்தை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.