கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஆமணக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (38). இவர் அப்பகுதியில் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவருடைய விவசாய நிலத்தில் அந்தப் பகுதி கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (65) என்பவர் தண்ணீர் பிடிப்பதற்காக சின்டெக்ஸ் டேங்க் அருகே சென்று பார்த்த போது, டேங்கிற்கு வரும் தண்ணீர் குழாய்கள் உடைக்கப்பட்டு இருந்துள்ளன.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், சந்தோஷ்தான் பைப் லைனை உடைத்திருப்பார் என நினைத்து சந்தோஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது செல்வத்திற்கு ஆதரவாக ரவி (49), பெருமாள் (45) மற்றும் செல்வத்தின் மகன் திருப்பதி (35) ஆகியோர் சேர்ந்து சந்தோஷை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதற்கிடையே சந்தோஷின் மூக்கின் ஒரு பகுதியைச் செல்வம் கடித்து வாயில் கவ்விக்கொண்டு அங்கிருந்து தலைமறைவாகியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து காயமடைந்த சந்தோஷ் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சந்தோஷ் கொடுத்த புகாரின் பேரில் செல்வம் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.