தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தில், ‘தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் இந்தியாவின் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், “இந்த நாடு எந்த வகையிலும் பின்தங்கியதில்லை. இந்தியா வணிகம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, அனைத்திலும் சிறந்து விளங்கியது. இந்தியர்களுக்கு கப்பல் கட்டுவதற்கும் தெரிந்திருந்தது என்பது போன்ற வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய வரலாற்றை வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
உலகில் இரண்டாவது வளமான நாடாக இந்தியா கருதப்படுகிறது. அந்த அளவுக்கு நாடு செழிப்பாக உள்ளது. தொழில்மயமான நமது நாட்டில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடிய போது பாரத பிரதமர் நரேந்திர மோடி, இனி வரக்கூடிய காலங்கள் அமுத காலங்கள் என குறிப்பிட்டிருந்தார். அந்த அளவிற்கு உலகில் உள்ள நாடுகளில் பொருளாதார வளர்ச்சி பெற்ற ஐந்தாவது நாடாக இந்தியா விளங்கி வருகிறது.
விவசாயத்தில், தகவல் தொழில்நுட்பத்தில் மின்னணுப் பொருள் உற்பத்தியில் துணிகள் உற்பத்தியில் இந்தியா மிகச் சிறப்பான நிலையில் உள்ளது. அன்னிய செலாவணியை கையாளுவதில் நமது நாடு சிறப்பாக உள்ளது. இந்திய நாட்டின் ரூபாய் இன்று 16 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு ஆகும். இந்திய நாட்டினரிடம் பல திறமைகள் உள்ளன. அவற்றை உலக நாடுகள் கொரோனா காலகட்டத்தில் புரிந்து கொண்டுள்ளது.
நாட்டில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட அனைத்து நாடுகளோடும் இந்தியா நட்புறவாக உள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, கிழக்கத்திய நாடுகள் என எல்லா நாடுகளோடும் இந்தியாவின் வர்த்தகம் சமமாக உள்ளது. ‘பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது இந்தியா’ என்பதை எடுத்துக் கூற பல விஷயங்கள் உள்ளன. பல நூற்றாண்டுக்கு முன்னர் சுதேசி கொள்கைக்கு வித்திட்ட வ.உ.சிதம்பரனாரின் துணிவு நாம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.
மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடிய ஆட்சி இப்போது நடக்கிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் 25 ஆண்டுகளை முன்னேற்றும் சிந்தனையோடு செயல்பட்டு வருகிறார். ‘பாரத நாடு நூறாவது சுதந்திரத்தை கொண்டாடும்போது உலகில் உள்ள வல்லரசு நாடுகளுக்கெல்லாம் வல்லரசு நாடாக அது மாறும்’ என்ற பாரத பிரதமரின் கனவு உங்களால் செயல் வடிவம் ஆகும்” என்று பேசினார்.