ராகுல் காந்தியின் செல்போனை உளவுபார்ப்பதால் பாஜகவுக்கு எந்த பயனும் இல்லை என பாஜகவை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
தனது டிவிட்டர் கணக்கு முடக்கம் குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் பாஜகவை சேர்ந்த குஷ்பு புகார் அளித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, “நேற்று எனது ட்விட்டர் கணக்கிலிருந்து எனக்கு தெரியாமலேயே சில ட்வீட்கள் செய்யப்பட்டன. இன்று எனது கணக்கின் பெயர் மாற்றப்பட்டது. அதபின்னர் எனது ட்விட்டர் கணக்கின் மொத்த தகவல்களும் அழிக்கப்பட்டன. என்னுடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு இப்போது மீண்டும் காட்டுகிறது. ஆனாலும் என்னால் என் கணக்கை பயன்படுத்த முடியவில்லை. இது தொடர்பாக நான் ட்விட்டரில் புகாரளித்தபோது எனது பாஸ்வேர்டு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால், என் ட்விட்டர் கணக்கு தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளதால் நான் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். ராகுல் காந்தியின் செல்போனை உளவுபார்ப்பதால் பாஜகவுக்கு எந்த பயனும் இல்லை. ஆளுநர் பதவிக்கு வரும் அளவிற்கு எனக்கு வயதாகவில்லை.” என தெரிவித்தார்.