12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் குன்னூரில் உள்ள முக்கிய சுற்றலாத்தலமான லேம்ஸ்ராக் பகுதியில் பூத்து குலுங்குவது அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிஞ்சி நிலமான நீலகிரி பகுதிகளின் பல சிறப்புகளில் குறிஞ்சி மலர்களும் ஒன்று. மணி வடிவில் நீலநிறத்தில் உள்ள இம்மலர்கள் நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான மலைகளில் இயற்கையாகவே வளர்ந்துள்ள ஒருதாவரம். ஸ்ட்ரோபிலாந்தஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இத்தாவரம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடியது. ஆசிய கண்டத்தில் 150 வகை குறிஞ்சியும், இந்தியாவில் 150 வகை குறிஞ்சியும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
நீலகிரியில் மட்டும் 30 வகை குறிஞ்சி மலர்கள் உள்ளன. நீலகிரியில் தற்போது குன்னூரை அடுத்துள்ள லேம்ஸ்ராக் காட்சி முனையில் குறிஞ்சி மலர்கள் பூத்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது. இக்கால கட்டத்தில் இம்மலர்களில் தேன் அதிகமாக இருப்பதால் தேனீக்கள் இதனை சேகரிக்க தொடங்கும். அதேவேளையில் பழங்குடியின மக்களான இருளர் மற்றும் குரும்பர் இனமக்கள் தேனீக்கள் கூட்டிலிருந்து தேன் சேகரிப்பில் ஈடுபடுவர். சுற்றுலாப் பயணிகள் காணும் தூரத்தில் உள்ள இந்த குறிஞ்சி மலர்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.